திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.22 திருக்குடமூக்கு (கும்பகோணம்) - திருக்குறுந்தொகை
பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களை
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.
1
பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
கூத்தா டியுறை யுங்குட மூக்கிலே.
2
நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி யெனப்படுங்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.
3
ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னுமினி தாகும் மியமுனைச்
சேதா ஏறுடை யானமர்ந் தவிடங்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.
4
நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோ டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை யான்குட மூக்கிலே.
5
துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவ னாய்ப்பார்த்தன் மேற்கணை தொட்டவெங்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே.
6
தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றா வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.
7
காமி யஞ்செய்து காலம் கழியாதே,
ஓமி யஞ்செய்தங் குள்ளத் துணர்மினோ
சாமி யோடு சரச்சுவ தியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.
8
சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாங்
குரவ னாருறை யுங்குட மூக்கிலே.
9
அன்று தானரக் கன்கயி லாயத்தைச்
சென்று தானெடுக் கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கேட் டான்குட மூக்கிலே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com